×

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் 18-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?.. கலைவாணர் அரங்கத்திலேயே நடத்த முடிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் அல்லது 2வது வாரம் கூடுவது வழக்கம். ஆணடின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழக கவர்னர் உரையாற்றுவார். இந்த ஆண்டின் கூட்டம், ஜனவரி 18-ம் தேதி (பொங்கல் பண்டிகைக்கு பின்) நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் காலை சட்டப்பேரவை கூடியதும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுவார். தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வருகிற மே மாதம் 24ம் தேதி முடிவடைகிறது. அதனால் தமிழகத்தில் இன்னும் 4 மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் வர உள்ளதால் ஆளுநர் உரையில், தமிழக அரசின் புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள், வளர்ச்சி பணிகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. கவர்னர் உரையாற்றி முடிந்ததும் அன்றைய கூட்டம் உடனடியாக ஒத்தி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி, சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வசதியாக, கவர்னர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திலேயே நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதே கலைவாணர் அரங்கத்தில்தான் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர்கள், சட்டப்பேரவை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கவர்னர் உரையுடன் முடியும் சட்டப்பேரவை கூட்டத்தை தொடர்ந்து, மீண்டும் பிப்ரவரி இறுதியில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். அதில், தமிழக அரசின் 2021ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. …

The post கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் 18-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?.. கலைவாணர் அரங்கத்திலேயே நடத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Governor Banwaril ,Chennai ,Tamil Nadu ,Governor Panwaril ,Kalyavanar Stadium ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...